தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - 2024 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதன்படி இந்த மாநாடு பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது அதை ஒட்டி கல்லூரி வளாகத்தில் ஐந்துக்கு மேற்பட்ட மிகப் பிரமாண்டமான செட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு சாமி சிலைகள் தத்ரூபமாகச் செய்யப்பட்டு அங்கங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பழனியில் இப்படி முருகனுக்காக ஒரு மாநாடு இதுவரை நடந்ததில்லை என்பதால் இந்த அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டைப் பார்க்கப் பொதுமக்களும் முருக பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுப் பூரித்துப் போய் செல்கிறார்கள்.
இந்த நிலையில் அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோ மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் ( ஆகஸ்ட் 24 மற்றும் 25) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. அனுமதியும் இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்திருக்கிறார். அதே சமயம் மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டினை காண வரும் பொதுமக்கள் மாநாடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04545 241471, 1800 425 9925 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுப்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.