
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில் எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1973-74 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த பழைய மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த, நமது நக்கீரன் புலனாய்வு வாரமிருமுறை இதழின் ஆசிரியர் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற பழைய மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தினர்.
நக்கீரன் ஆசிரியருடன் படித்தும், அவருடன் பழைய நட்பினைத் தொடர்ந்தும் இருந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சிரித்து மகிழ்ந்தனர். பழைய நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், சிறந்த இதழ் ஆசிரியருக்காக கலைஞரின் எழுதுகோல் விருது பெற்ற ஆசிரியருக்கு பழைய மாணவர்கள், தங்கள் மனதின் ஆழத்தில் பொதிந்திருந்த மகிழ்ச்சியை அப்போது வெளிப்படுத்தினர்.

இச்சந்திப்பின் போது பேசிய நமது நக்கீரன் ஆசிரியர், “திருவிழாவிற்குச் செல்லும் குழந்தைகள் போல நான்கு நாட்களாக இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருந்தேன். பழைய கால நினைவுகளைச் சுமந்துகொண்டு வரும் கூட்டமாக இதைப் பார்க்கிறோம். அந்தப் பழைய வாழ்க்கை தற்போது கிடைக்காதா என்று ஏங்குகிறோம். பல விருதுகள் வரும்; போகும். ஆனால் இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாள் மிகவும் அற்புதமான நாள். அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வாழ்க்கை அனைத்துமே மனதில் நிழலாடுகிறது. இந்தத் தொடர்பு ஜென்மத்துக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்றார்.
மேலும், “நக்கீரன் கோபால் ஆவதற்குமுன் என்னுடைய பெயர் ராஜகோபால். எங்களுடன் படித்த பழைய மாணவர்கள் அனைவரையும் நெல்மணிகளைப் போல ஒன்றிணைத்து, இந்தப் பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் தினமாக இந்நாளைப் பார்க்கிறோம். பழைய நண்பர்கள் அனைவரும் பெரிய பெரிய பதவியில், அந்தஸ்தில் இருக்கிறார்கள். அனைத்தையும் மறந்து தற்போது ஒரே கோட்டில் இந்த விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம். இந்த நாள் ஒரு சுகமான போதையைத் தருகிறது. மிகுந்த சந்தோசத்தை அள்ளித்தரும் நாளாக இந்த நாள் இருக்கிறது.” என்று கூற, செய்தியாளர்கள் ஆசிரியரிடம் கேள்விக் கனைகளைத் தொடுத்தனர். அதற்கு ஆசிரியர் அளித்த பதிலை கீழே தொகுத்துள்ளோம்...

நீங்கள் படிக்கும் போது என்ன ஆகவேண்டும் என்று நினைத்தீர்கள்?
நான் எதுவும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் நான் ஒரு ஆர்டிஸ்ட். என்னைக் கொக்கு என்று அழைப்பார்கள். கொக்கு பிள்ளை நீ எப்படி இப்படி ஆன என்று கேட்பார்கள். பள்ளியில் ஆசிரியர் என்ன ஆகவேண்டும் எனக் கேட்டபோது, நான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறினேன். ஆனால் பி.காம் படித்தேன். பி.காம் படித்தால் பேங்க் வேலை என்று கூறினார்கள். பி.காம் படித்தவர்களுக்கு எல்லாம் பேங்க் வேலை கிடைத்துவிடும் என்றால், தெருத்தெருவாக பேங்க் தான் வைக்கவேண்டும். அப்படியென்றால், பேங்க் வேலை இல்லை. அரிசிக் கடை. அதனை தொடர்ந்து சென்னைக்குச் சென்று வேறு வழியில்லாமல் நக்கீரனாய் வாழ்கிறேன். அதையெல்லாம் விட, எனக்கு பெரிதாய் கிடைத்தது கலைஞரின் எழுதுகோல் விருது. அதற்கும் மேலாக, என்னுடைய நண்பர்களுடன் இங்கு நான் இருப்பது. அருப்புக்கோட்டையில் சாப்பாடுதான் ஸ்பெஷல். ரத்தப் பொரியல் போடுவார்களா என்று நினைத்துக் கொண்டே வந்தேன். காலையில் ஈரல், ரத்தப்பொரியலுடன், முட்டை தோசை. மதியம் சீரக சம்பா பிரியாணியை நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டது, மிகப்பெரிய சந்தோசம்.
வீரப்பனைச் சந்திப்பதற்கு காட்டுக்குள் சென்றீர்கள். அதேபோல எங்களையும் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்று உங்கள் நண்பர்கள் கூறியிருந்தால், அதற்கு நீங்கள் என்ன பதில் தருவீர்கள்?
ரஜினி காட்டுக்கு என்னுடன் வரத் தயாராகி விட்டார். நானும் வருகிறேன் என்றார். அப்போது கலைஞர் எனக்கு போன் செய்தார். என்ன ரஜினி வருகிறாராமே என்று கேட்டார். ஏற்கனவே ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக்கிட்டார். இவரும் மாட்டிக்கிட்டா என்னுடைய கதை கந்தல்தான். கலைஞரும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். யாரைக் கேட்டு அழைத்துச் சென்றீர்கள் என்று நானும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அப்போது அது நடந்திருந்தால் நான் இங்கு இப்போது பேட்டியே கொடுத்திருக்க முடியாது. இதை நீயே சமாளி என்று கலைஞர் என்னிடம் கூறினார்.
ரஜினி பேக்குடன் தயாராக இருந்தார். இமயமலைக்குச் செல்வது போல ரெடியாகிவிட்டார். நான் ரஜினியைப் பார்த்து சிரித்தேன். என்ன கோபால் நல்லா இல்லையா என்று கேட்டார். ஏங்க.. நான் அங்க போயி ரெடி பண்ணிட்டு உங்கள கூப்பிடுறேன் என அவருக்கு டேக்கா கொடுத்துட்டேன். காடு என்பது நாம் நினைத்தது போல் இருக்காது. வீரப்பனிடமிருந்து அழைப்பு இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் சிறிய சந்தேகம் இருந்தாலும் சுட்டுக்கொன்று விடுவான்.
நீங்கள் அழைத்துச் செல்லாததால் ரஜினி ஏமாற்றம் அடைந்தாரா?
ஏமாற்றம் அடையவில்லை. அவர் புரிந்துகொண்டார். ராஜ்குமாரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. நான் சொல்லி புரிய வைத்துவிட்டேன்.