தமிழக எம்.பி.க்கள் பலரும் அமைதியாக இருக்கத் தனது தொகுதிக்குள் களமிறங்கியுள்ளார் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.! கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கிய கனிமொழி, மேலும் 50 லட்ச ரூபாயை ஒதுக்கியிருக்கிறார். இன்று சென்னையிலிருந்து கார் மூலமாகக் கிட்டத்தட்ட 700 கிலோ மீட்டர் பயணித்து தூத்துக்குடி சென்றவர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து 1 கோடியே 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, ‘’கரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான தற்காப்பு கருவிகள் வாங்குதல், கரோனாவுக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இத்தொகையை ஒதுக்கியிருக்கிறேன்‘’ என்பதை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார் கனிமொழி.
இதனையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு விசிட் அடித்த கனிமொழி, அங்குள்ள டாக்டர்களிடம் மருத்துவ பணியாளர்களிடமும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார். சென்னையிலிருந்து தன்னுடன் கொண்டு சென்ற கையுறைகள் , முகக் வசங்கள்,சானிடைசர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை டாக்டர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கியதுடன், ‘’கரோனாவைத் தடுப்பதற்கும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கும் தேவையான எந்த மருத்துவ உதவியாக இருந்தாலும் என்னிடம் கேட்கலாம். கால நேரம் எதுவும் பார்க்காதீர்கள். எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளுங்கள். அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக இருக்கிறேன்‘’ என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறார் கனிமொழி.
இதற்கிடையே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருக்கும் மக்களுக்கு இந்த மாத கடன் தொகையைத் தங்கள் கணக்குகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என வங்கிகளிடமிருந்து அனுப்பப்படும் தகவல்களால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் கடன் வாங்கியவர்கள்.
இதனை அறிந்த கனிமொழி, ‘’ மூன்று மாதங்களுக்கு கடன் தவனைத் தொகையை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய நிலையில், அதனை வங்கிகளும் நிதிநிறுவனங்களும் பின்பற்ற மறுக்கின்றன. மாத தவனையைக் கட்டத் தவறினால் கூடுதல் வட்டியுடன் வசூலிக்கப்படும் என வங்கிகள் பயமுறுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. கரோனாவால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்கள் மீது வங்கிகள் இறக்கி வைக்கும் இந்த மாதிரியான சுமைகள் கொடுமையானது. இந்தப் புதிய சுமையைச் சுமத்தாமல் இருக்க வங்கிகளுக்கு முறையான, கடுமையான உத்தரவுகளை மத்திய-மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும் ‘’ எனத் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் கனிமொழி.