சட்டப்பேரவைக் கூட்டத்தை மூன்று நாட்கள் நடத்த பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கலைவானர் அரங்கில் கவர்னர் உரையுடன் இன்று (02.02.2021) துவங்கியது.
கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தன. இதனையடுத்து தனது உரையை தொடர்ந்து வாசித்த கவர்னர் பன்வாரிலால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை ஆங்காங்கே பாராட்டினார். தமிழகம் வெற்றிநடைப் போடுவதாகவும் குறிப்பிட்டார்.
கவர்னரின் உரை பிற்பகலில் முடிவடைந்ததையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தைக் கூட்டினார் சபாநாயகர் தனபால். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பேரவையின் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், பேரவைக் கூட்டத்தை பிப்ரவரி 5-ம் தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.