
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து முதற்கட்டமாக வெளியான தகவலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட எடப்பாடி பழனிசாமி சென்றதாக கூறப்பட்டது. அதே சமயம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்விக்கு ‘பாஜக கிஜக என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் ஆறு மாத காலத்திற்குப் பின்னர் தெரியவரும். நாங்களே செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்து தெரிவிப்போம்’ என அவர் தெரிவித்திருந்தார். அதோடு அண்மையில் நடைபெற்ற ஜக்கியின் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதே நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.பி. வேலுமணி நெருக்கம் காட்டிய பின்னரே மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கள் எழுந்தது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி.க்களும் உடன் இருந்தனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள படத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவிப்பது போன்றும், அப்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என மாநிலங்களவையில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.