குமரி மாவட்ட காங்கிரஸ் பிரமுகா் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ் அழகிரி நாகா்கோவில் வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "உள்ளாட்சி தோ்தல் சம்மந்தமாக திமுக உச்சநீதிமன்றம் சென்றதால் சில வழிகாட்டுதல் கிடைத்தது. ஆனால் தமிழக தோ்தல் ஆணையம் அதையும் பின்பற்றவில்லை. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தோ்தல் சட்டத்திற்கு புறம்பானது. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இடஓதுக்கீடு சரியாக செய்யபடவில்லை.தேர்தல் என்பது மக்கள் நேரடியாக பங்களிப்பதாக இருக்க வேண்டும், மறைமுக தோ்தலாக இருக்க கூடாது.
உள்ளாட்சி தோ்தலை முறையாக நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடர உள்ளோம். உள்ளாட்சி தோ்தலை சந்திக்க திமுக தயங்குகிறது என்ற முதல்வா் எடப்பாடி பழனிச்சாமியி்ன் கருத்து தவறானது. முதல்வருக்கு தைரியம் இருந்தால் நேரடி தோ்தலை அறிவிக்க தயாரா? தைரியம் இருந்தால் நேரடி தோ்தலை அறிவிக்கட்டும். எடப்பாடி அரசு சட்டம் ஒழுங்கில் பின் தங்கியுள்ளது. தமிழக காவல்துறை எடப்பாடி சொல்லும் பணியை மட்டும்தான் செய்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை" என தெரிவித்தார்.