திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.தொழிலதிபரான இவருக்குத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களையும், கல்குவாரிகள் மற்றும் கிராணைட் குவாரிகளை நடத்தி வருகிறார். அதோடு மாட்டு எலும்புகளை ஏற்றுமதி செய்தல், பூக்களை ஏற்றுமதி செய்தல், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த புகாரின் பேரில் மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெங்கடேசனுக்கு சொந்தமான 16 இடங்களில் இன்று (06.11.2024) காலை 08.00 மணி முதல் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 50 கார்களில் வந்த 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், தச்சநல்லூர், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையானது இன்று இரவு வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.