வேலூர் சாராக காவல்துறை தலைவரான டி.ஐ.ஜீ அலுவலகம் அண்ணாசாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே மாவட்ட ஆட்சியர் வீடு, அரசு சுற்றுலா மாளிகை, நீதிபதிகள் குடியிருப்பு போன்றவை உள்ளன. அதோடு சில முக்கிய அரசு அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளன. நகரத்தின் மையத்தில் உள்ள இந்த பகுதி வழியாக திருவண்ணாமலை உட்பட தென்மாவட்டங்களுக்கான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
டி.ஐ.ஐீ அலுவலக வளாகம் பரந்து விரிந்தது. இந்த அலுவலக வளாகத்தின் உள்ளே சந்தனமரங்கள், தேக்குமரங்கள் என பல மரங்கள் உள்ளன. இதில் ஒரு சந்தன மரத்தை கடந்த அக்டோபர் 23ந்தேதி இரவு வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. 24 ஆம் தேதி காலை பணிக்கு வந்த காவலர்கள் இதனைப்பார்த்துவிட்டு டி.ஐ.ஐீ காமனிக்கு தகவல் தந்துள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ள காவல்துறை சாரக அதிகாரியின் அலுவலக வளாகத்திலேயே இருந்த மரம் திருடு போயிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மாவட்டத்தின் மிக முக்கிய அரசு அதிகாரியின் அலுவலத்தில், வீட்டில் திருடு போவது புதியதல்ல. இதே வேலூரில் கடந்த 2015ல் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த நந்தகோபால் இருந்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கான அரசு பங்களாவில் வளர்ந்திருந்த பெரிய சந்தனமரத்தை, வெட்டி எடுத்து சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்தது. கலெக்டர் பங்களாவுக்கு அருகில் அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. அந்த மாளிகை வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை 2016ல் வெட்டி எடுத்து சென்றிருந்தனர் மரக்கொள்ளையர்கள். இந்த இரண்டு வழக்கிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் அதே பகுதியில் நாட்டை, பொதுமக்களை பாதுகாக்கும் காவல்துறையின் உயர் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த சந்தன மரத்தையே பாதுகாக்க முடியாமல் திருடு கொடுத்துள்ளது காவல்துறை.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், சந்தனமரம் என்ன சோப்பு டப்பாவா பாக்கெட்ல எடுத்து வச்சிக்கிட்டு போறாதுக்கு. பெரியதாக வளர்ந்த மரம். அதனை மிஷின் வழியாக அறுத்து கீழே தள்ளி, அதன்பின் அதன் கிளைகளை கட் செய்துவிட்டு, பின்னர் மரத்தினை துண்டு துண்டாக்கி அதனை வாகனத்தில் ஏற்றி எடுத்து செல்ல குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரமாகியிருக்கும். டிஐஐீ அலுவலகம் என்பது பாதுகாப்பு நிறைந்தது. அப்படியிருக்க அந்த அலுவலகத்தில் இருந்த மரத்தையே காப்பாற்ற முடியவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. அதிகாரிகள் துணையில்லாமல் இதனை செய்தியிருக்க சாத்தியமேயில்லை என்கிறார்கள்.