தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முசிறியில் 'விவசாயிகள் சங்கமம்' மற்றும் ஏர்கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று பேசுகையில், ''இந்தியாவில் ஒரு பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆசிய நாடுகளில் எத்தனையோ நாடுகள் இன்று ஏழை நாடாகவும், பின் தங்கியும் உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் இந்தியாவும் அப்படி இருந்திருக்கும். பாஜகவுக்கு என்று பெரிய கொள்கையோ கோட்பாடோ கிடையாது. அது எதிர்பாராத ஒரு விபத்து காரணமாகவே ஆட்சிக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களிடம் நேரடியாக சென்று கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். அவருடைய இந்த அணுகுமுறை பாஜகவை வீழ்த்தும். மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிவதுதான் தேசத்தின் சிறந்த தலைமை ஆகும். புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க முடியும்.
பிரதமர் மோடிக்கும், அவரது நண்பர்களான 5 பணக்காரர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் இந்த வேளாண் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. அதில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. தென்னகத்தின் செல்போன் நிறுவனமான ஏர்செல் முடக்கப்பட்டு விட்டது.
எதிர்காலத்தில் ஜியோ மட்டுமே ஒரே செல்போன் நிறுவனமாக இந்தியாவில் இருக்கும். அதேபோன்றுதான் விவசாயத்தை அழிக்கும் நோக்கத்தில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் கலப்பு பொருளாதாரம் இருந்தால் தான் தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மத்திய அரசு ரயில்வே, எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மத்தியில் நடக்கும் ஆட்சி இவ்வளவு மோசம் என்றால், தமிழ் நாட்டில் நடைபெறும் ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில் உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தடை பெற்றுள்ளார். இந்த தடை உத்தரவை மேல்முறையீடு செய்ய மோடி வசமுள்ள சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக விவசாய கடன் தள்ளுபடி வேண்டும் என்று கத்தி கொண்டு இருந்தோம். ஆனால் தேர்தலுக்காவும், அரசியலுக்காகவும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்துள்ளார். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது என்பது அவர்களது கொள்கையில் இல்லாத போது எதிர்க்கட்சியினர் பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் மீது எவ்வித பற்றும் எடப்பாடிக்கு இல்லை என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
மத்தியிலும், மாநிலத்திலும் அதிகார மாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும்'' என்று பேசினார்.