தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பருவநிலை மாற்றத்தாலும் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்சல்களால் பொதுமக்கள் காய்ச்சல் நோயால் அவதியடைந்து அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட மர்ம காய்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.
இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலாக இருக்குமோ? என்ற பயத்தில் தினந்தோறும் 2000-த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெற்று செல்கிறார்கள். மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு பேராசிடமல், அவில், அமாக்ஸிலின் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாத்திரைகள் வேண்டாம் சிரப்பாக வேண்டும் என கேட்டு குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் மற்ற நோயாளிகளை கவனிப்பதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு பாதித்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வரப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், சாதரண நேரங்களில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 1000 முதல் 1500 நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெற்று செல்வார்கள். தற்போது பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல்களுக்கு ஒரு நாளைக்கு 2500 பேர் வரை வந்து செல்கிறார்கள். அதேபோல் தற்போது அரசுடன் அண்ணாமலைப்பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளதால் அங்கும் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் இங்கு கூட்டம் சற்று குறைந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் புறநோயாளிகள் பிரிவு மதியம் 12 மணி புறநோயாளிகள் பார்வை நேரம் முடிந்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
தற்போது அரசு இருமல் மற்றும் நோய் எதிர்ப்புகான மருந்துகளை பாட்டல்களில் கொடுப்பதை நிறுத்தி மாத்திரையாக வழங்கபட்டு வருகிறது. சிலர் சிரப்பு தான் வேண்டும் என்று மருத்துவர் உள்ளிட்ட மருந்தாளுநர்ளிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதால் மனஉலைச்சல் ஏற்படுகிறது. இதனால் மற்ற நோயாளிகளை கவனிக்கமுடியாத நிலையும் கால தாமதமும் ஏற்படுவதாக கூறுகிறார்கள். எனவே அரசு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.