குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள். பொது மக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற 120 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போலீஸார் கூறியதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக போலீஸார் தடியடி நடத்தியதாக தகவல் கூறுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதனால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், கிண்டி, விமான நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, மதுரை மாவட்டம் நெல்பேட்டை, தேனி, திருச்சி,செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.