கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் அவியனூரில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வரசுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சவர் எழுப்புவதற்காக கோயில் வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்த போது சுமார் 3 1/2 அடி ஆழத்தில் ஒரு பலகை கல் கிடைத்தது. அந்த பலகை கல்லில் கல்வெட்டுகள் உள்ளதாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கல்வெட்டை ஆய்வு செய்த போது, இந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு என்பதை உறுதி செய்துள்ளனர்.மேலும், இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, 'அவியனூரில் கண்டெடுத்த பலகை கல் 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இப்பலகை கல்லில் மொத்தம் எட்டு வரிகள் கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு செய்தி:
கல்வெட்டு" ஸ்வஸ்தஸ்ரீ திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன் தோளும் வாளுந் துணையெனக் கேளலர் " என்ற மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. இராசேந்திரசோழன் என்ற இயற்பெயர் உடைய முதலாம் குலோத்துங்க சோழனின் இக்கல்வெட்டு பாதி உடைந்த பகுதி மட்டுமே இங்கே காணப்படுவதால் இக்கோயிலின் சாமி பெயர் ஈஸ்வரமுடைய மகாதேவர் என்று பாதி மட்டுமே தெரிகிறது. மேலும் இவருடைய ஆட்சியாண்டை கண்டறிய முடியவில்லை.
இவ்வூரைச் சேர்ந்த பிராமணனின் மனைவி " பிராமணி பொன்னங்கைச் சானி" என்பவர் இக்கோயிலில் விளக்கு எரிக்க ஒன்பது காசுகள் கொடுத்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. முதலாம் குலோத்துங்கன் 1070 முதல் 1120 வரை ஆட்சி புரிந்தார். அவியனூரில் கண்டெடுத்த கல்வெட்டில் காணப்படும் திருமன்னி விளங்கு என்ற மெய்கீர்த்தி முதலாம் குலோத்துங்க சோழனின் நான்காவது ஆட்சி ஆண்டு வரை உள்ளது.
அதன்பிறகு ஆட்சி ஆண்டில் இருந்து புகழ்மாது விளங்க செயமாது விரும்ப என்று காணப்படும். பல்லவர் காலத்திலேயே பழமையானது என்று திருவதிகையில் உள்ள இரண்டாம் பரமேஸ்வரனின் கல்வெட்டில் இவ்வூரில் அகத்தீஸ்வரர் கோயில் இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் பல்லவர் காலத்தில் இருந்தே அவியனூர் பழமையான வரலாற்றைக் கொண்டது என தெரியவருகிறது.
தற்போது அவியனூரில் கண்டறியப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு மூலம் சோழர் காலத்திலும் அவியனூரின் பழமையை அறிந்து கொள்ள புதிய ஆதாரமாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறினார்கள்.