திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணமகனின் வீட்டார் போலீஸில் புகாரளித்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் மஞ்சுநாதன்-ராணி தம்பதி. இவர்களுடைய மகனான சரவணனுக்கு செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்த உறவினர் பெண்ணான சுவேதா என்பவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மாமியார் வீட்டில் விருந்துக்காக தங்கியிருந்த நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே வீட்டு படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மணமகன் சரவணன் சடலமாக கிடந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உயிரிழந்த வழக்கை சந்தேக வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணமகன் வீட்டார் சரவணனின் உடலை சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நிலையில் சரவணன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்த உயிரிழப்பு சம்பவத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் விசாரணையில் சரவணன் திருமணம் செய்து கொண்ட மணப்பெண் சுவேதா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் இந்த திருமணத்தில் அவருக்கு சம்மதம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் மணமகன் சரவணன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உறுதியற்றவர் அல்ல எனக் கூறும் மணமகனின் பெற்றோர்கள், இது திட்டமிட்ட கொலை. மணப்பெண் வீட்டாரை விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.