தமிழ்நாடு அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனால், விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் முறையாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திவருகின்றனர் எனக் கூறி கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலாளர் மூவேந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது காந்தி நகர் பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; ‘எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கி வந்த நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டோம். அதையடுத்து அந்த இடத்தில் இருந்த பழைய நீர் தேக்க தொட்டியை இடித்துவிட்டு, ரூ.20 லட்சம் செலவில் புதிய நீர் தேக்க தொட்டி அதே இடத்தில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் பழைய தொட்டி இடிக்கப்பட்டு புதிய தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவே இல்லை. இதை கண்டித்தும், விரைவில் நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்து மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தியும் தான் கருப்புக்கொடி ஏந்தி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டோம்’ என்று கூறினர்.
இந்தத் தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது அலி, தேவராஜன், ஆகியோர் அரசூர் கிராமத்திற்கு வந்து காந்திநகர் மக்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விரைவில் புதிய நீர்த் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.