டெல்டாவில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவேண்டுமானால் மணல் திருட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் அதிகரித்து விட்டது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் அனுமதியோடும், அனுமதி இல்லாமலும், பல்வேறு இடங்களில் முறைகேடாக மணல் கொள்ளை தலைவிரித்தாடுகிறது. பாசன ஆறுகளிலும், வாய்க்கால்களும், ஏரி குளங்களிலும், தனிநபர் விளைநிலங்களிலும், மணல் கொள்ளை நடக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகளும், காவல்துறையும் நேரடியாகவே கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறுகையில், "தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டிலிருந்தே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி ஆற்றில் நீர் வரத்தின்மை மற்றும் போதுமான அளவு மழை பெய்யாததால், டெல்டா மாவட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சி மாவட்டங்களாகவே காட்சியளிக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
ஆங்காங்கே ஆறுகளில் மணல் திருட்டு நடப்பதால், மீதமுள்ள குடிநீரும் கிடைக்காமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கூறினால் மெத்தனமாகவுள்ளனர்.
இந்தத் தொடர் மணல் திருட்டால் கோடையில் மேலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் மூலம் மணல் திருட்டைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.