சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்துள்ளதால், அரசு ஊழியர்களைப் போல, தனியார் நிறுவன ஊழியர்களும் அரசுப் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், பிற நகரங்களில் இருந்து பிழைப்புக்காக வந்துள்ளவர்களின் வசதிக்காக, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 29 -இல் நடைபெறவுள்ளதாக செய்திகளில் படித்ததாகவும், அதில் எடுக்கப்படும் முடிவுகளில் மனுதாரரின் கோரிக்கை அடங்கினால், இந்த வழக்கிற்கு அவசியம் இருக்காது என்பதால், இந்த வழக்கை அடுத்த வாரம் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.