ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த புகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்திற்குப் புகார் வந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈரோடு எஸ்.பி சசிமோகன் உத்தரவின்படி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சிறுமியின் தாய் அவரது மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனை பிரிந்து சையத் அலி என்ற பெயிண்டர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் பருவமடைந்த உடனே கருமுட்டை விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளார். வளர்ப்புத் தந்தை சையத் அலி சிறுமியின் தாய் துணையுடன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும், கருமுட்டையை விற்பனை செய்ய உதவியதும் தெரிய வந்துள்ளது. இப்படி பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையை கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 என காட்ட போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் சிறுமியின் கருமுட்டையை பணம் கொடுத்து வாங்கிக் கொண்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தெரிந்தே இது நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.