கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இரண்டாவது குற்றவாளியான முருகன் சார்பில், கர்ப்பமுற்ற அவருடைய மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருக்கிறார் என குறிப்பிட்டு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முருகன் ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் “இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இன்றையதினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நபர் இன்று ஆஜராகவில்லை. அதனால், ஒத்தி வைக்கப்பட்டுள்ள 9-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட மூவரும், வழக்கறிஞர்களும் நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம், சார்ஜ் பிரேம் செய்யப்படும். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறுமென்று நம்புகிறோம்.” என்றார்.