திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அவருக்கு மெரீனாவில் இடம் தர மறுத்த எடப்பாடி அதிமுக அரசை கண்டித்து கூட்டுறவு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சேவகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ஐந்து பேர் நிர்வாகிகளாக வெற்றி பெற்றனர். இதில் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் சத்தியமூர்த்தி இறந்து விட்டார் மீதியுள்ள மாசிலா பெலிப்ஸ், கணேசன், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகிய நான்கு பேர் நிர்வாகிகளாக இருந்தும் கூட பதவி ஏற்பு நடைபெறாமல் இருந்தது.
இந்தநிலையில் தான் எடப்பாடி அரசு கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் வெற்றி பெற்ற திமுகவினர் நான்கு பேர் அப்பகுதியை சேர்ந்த சேவகம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று அந்த திமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் திடீரென தங்கள் ராஜினாமாவை அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.
இதுபற்றி திமுக உறுப்பினர்களிடம் கேட்டபோது... எங்கள் தலைவர் ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழை வளர்த்து வந்த எங்க தலைவருக்கு இந்த எடப்பாடி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்கி எங்க தலைவரை மெரினாவில் அடக்கம் செய்து இருக்கிறோம். இப்படி தமிழுக்காக உழைத்த எங்க தலைவனுக்கு இடம் தர மறுத்த இந்த எடப்பாடி ஆட்சியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நாங்கள் உறுப்பினாராக இருக்க விரும்பவில்லை என எங்க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.எஸ்சிடம் தெரியப்படுத்தினோம்.
அவரும் சரி என்று சொல்லி விட்டார். அதுனால தான் நான்கு பேரும் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கிறோம் என்று கூறினார்கள். இதே போல் அணைப்பட்டி, நிலைக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் இன்றும், நாளையும் ராஜினாமா கடிதம் கொடுத்து எடப்பாடி அரசுக்கு தங்கள் கண்டனத்தை ராஜினாமா மூலம் வெளிப்படுத்த உள்ளனர்.