கோவையில் செயல்பட்டு வரும் 'நல்லறம் அறக்கட்டளை' சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த மாற்று திறனாளி தொழிலாளி சுப்ரமணியம், தாய்-தந்தை இல்லாத ஆதரவற்றவர். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ். பி. அன்பரசனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். நடத்தி வைப்பதாக உறுதி தந்துள்ளார் அன்பரசன்.
இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லி, நல்லறம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, ஆர்.எஸ்.புரம் 'அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி' அருகிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில், சுப்ரமணியத்திற்கும் - ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் தலைமையில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 101 வகை சீர்வரிசை பொருட்கள் புதுமணத் தம்பதியினருக்கு இலவசமாக வழங்கினார் அன்பரசன். இந்த இலவச திருமணத்தில் நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், முருகவேல், அஞ்சுதா, மணிகண்டன், குமார் உட்பட புதுமண தம்பதியினரின் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அன்பரசன், அமைச்சர் வேலுமணியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.