தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்திருந்தாலும் 80 சதவீதம் பார்களை அனுமதி இல்லாமல் ஆளுங்கட்சியினர் நடத்தி வருகின்றனர். அந்த பார்களில் டாஸ்மாக் மது மட்டுமின்றி சொந்த கலப்பட மது வகைகளும் விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்படும் குடிமகன்களே குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள்.
இதில் புதுக்கோட்டை மாவட்டமும் விதிவிலக்கல்ல.. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், மட்டுமின்றி நடமாடும் மதுக்கடைகளும் செயல்படுகிறது. எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை என்பதால் ஆலங்குடி அருகில் பெயர் பலகை வைத்தே கள்ளத்தனமாக மதுக்கடை நடந்தது. அங்குதான் தினசரி சீருடை பணியாளர்கள் சென்று வருவதுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பும் நடக்கிறது. இப்படி எப்படியெல்லாமோ மது விற்பனை நடப்பதைப் பார்த்த பலரும் மாமூல் இல்லாமலும், விற்பனையை தொடங்கியுள்ளதால் மாமூல் வியாபாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுக்கிறார்கள்.
இந்தநிலையில் தான் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் எரிசாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கறம்பக்குடி அருகேயுள்ள அழகன்விடுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அழகன்விடுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), தஞ்சாவூர் மாவட்டம், இலுப்பைவிடுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு (37) ஆகியோர் அழகன்விடுதி குளத்துப்பகுதியில் தனித்தனியோ எரிசாரயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஸ்வநாதன் மற்றும் சாமிக்கண்ணு ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 225 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
இப்படி ஆங்காங்கே போலி மது எரிசாராயம் விற்க தொடங்கியதால் டாஸ்மாக் வியாபாரம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.