
எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் வரையிலான சாலையை சரி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நெடுஞ்சாலை உபகோட்ட பகுதிக்கு உட்பட்ட உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் வரையிலான சுமார் 6 கிலோமீட்டர் தூர சாலையானது 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. உடன்குடி, குமாரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, மாணிக்கபுரம் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பயண போக்குவரத்திற்கு பயனற்று, சாலையில் பயணம் செய்தாலே பிரசவம் என்கின்ற மோசமான நிலை இங்கு காணப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு இரண்டு கட்டமாக இச்சாலையை சரி செய்வதற்கான பணிகளை துவங்கினர் ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் தற்போது வரை கிடப்பில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது உடன்குடி சுற்றுவட்டார பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருவதாகவும், 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை உடனே சரி செய்து தருமாறும் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைதுறையிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தினர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.