Skip to main content

ராமநாதபுரம் எம்.பி அன்வர் ராஜா மகன் மீது தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினார் அளித்துள்ள புகார்

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
anwar

 

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி மீது சென்னை தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘’கடந்த 2015ம் ஆண்டு நான் சிறந்த தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்த பரிசு வழங்கும் விழாவில் அன்வர் ராஜா எம்.பி மகன் நாசர் அலி எனக்கு அறிமுகம் ஆனார். ஊடக தொழிலில் தனக்கு விருப்பம் இருப்பதாக நாசர் அலி கூறினார். எனக்கும் ஊடக தொழிலில் முன்னேற வேண்டும் என்பதால் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.

 

சென்னை சைதாப்பேட்டை, விக்னேஷ் அடுக்ககத்தில் எனது அலுவலகம் உள்ளது. தொழில் நிமித்தமாக நாசர் அலி என்னை சந்தித்து செல்வார். திடிரென நாசர் அலி உன்னிடம் பணமிருந்தால் கொடு என்றார். அவர்மீது இருந்த அன்பின் காரணமாக பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். மேலும் பணம் தேவைப்படுகிறது என்று கூறியதையடுத்து உறவினர்கள் நண்பர்களிடமிருந்து 20 லட்ச ரூபாய் கடனாக பெற்று மொத்தம் 50 லட்சம் கொடுத்துள்ளேன்.

 

இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்திவந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவரது போக்கில் மாற்றம் தெரியவந்தது. இவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. நான் அதை பற்றி கேட்டபோது இதை கேட்பதற்கு உரிமையில்லை என்று என்னையும் எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளில் பேசினார்.

 

இந்நிலையில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் எனது வீட்டிற்கு வருவதை குறைத்து கொண்டார். இவரது தந்தை அன்வர் ராஜா எம்.பியிடம் முறையிட்டேன். அவரும் தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்து வைப்பதாக கூறி என்னை அனுப்பிவைத்துவிட்டார். அன்வர் ராஜா எம்.பி அவர்களின் நேர்முக உதவியாளர் தேவா என்னை தொடர்பு கொண்டு இனிமேல் நாசர் அலியிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. அப்படி வைத்தால் நீ உயிருடன் இருக்கமாட்டாய் என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.  தற்போது திருமணம் செய்ய உள்ளநிலையில் அன்வர் ராஜா எம்.பி மகன்,அவரது நேர்முக உதவியாளர் தேவா மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் மனு அளித்துள்ளார்.

 

இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.  இதுபற்றி அன்வர் ராஜாவிடம் கேட்டபோது, முற்றிலும் தவறான தகவல். இது என்னுடைய மகன் சினிமா துறையில் உள்ளவன்,தேவையில்லாமல் என்னையும் எனது மகனையும் அசிங்கப்படுத்தி வருகின்றனர் என்றார்.


 

சார்ந்த செய்திகள்