திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர் பல இடங்களில் தனது வசூல் வேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் மரங்களை வெட்டி செல்கின்றனர். இதனைத் தடுக்கும் அதிகாரியான மூர்த்தி, உடன் இருக்கும் வனவர் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை கை பாகையாக வைத்துக் கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்.
அது மட்டும் அல்லாமல் தன்னுடைய வசூல் சாம்ராஜ்யத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் வெட்டப்பட்ட மரங்களை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் நபரிடம் பகிரங்கமாக மாமூல் கேட்டது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல வேறு ஒரு நபரிடம் 3000 ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கி தனது பர்சில் வைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.