நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப் பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.
அதேசமயம் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அக்கட்சியின் தமிழக தலைவர் ஆனந்தன், “உடனடியாக யானையை கொடியில் இருந்து நீக்க வேண்டும்; இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போன்” என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்களது யானை சின்னத்தை விஜய் அவருடைய கட்சிக் கொடியில் பயன்படுத்த எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை பகுஜன் சமாஜ் கட்சியினர் கொடுத்துள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.