“தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற 59 கிராம மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நம்பியார்நகர், பூம்புகார், சந்திரபாடி மடவாய்மேடு, திருமுல்லைவாயல், உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதே நேரம், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு மீனவர்கள் நாகை மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை இன்று (27.07.2021) நடத்தியுள்ளனர். கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 59 கிராம மீனவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது மாநில அரசும் ஒன்றிய அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மீனவர்களுக்கு எதிரானது என்றும் தீர்மானங்களை நிறைவேற்றினர். அந்த மனுவை நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து கோரிக்கை மனுவாக அளிப்பது என்று முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில அளவில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டும்வரை மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகங்களில் ஆய்வுகள் எதுவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்தக்கூடாது என்றும், சிறு தொழில்கள் பாதிக்காத வண்ணம் அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தின் வாயிலாக மீனவர்கள் வலியுறுத்தினர்.