டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு ஜீன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இன்றோடு எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு சாவுமணி அடித்துள்ளது மத்திய, மாநில அரசும், கர்நாடக அரசும். மேட்டூர் அணையை ஜீன் 12 ம் தேதி திறக்காத அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் நாகை மாவட்ட விவசாயிகள் உடைந்த கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், பெண்கள் கும்மியடித்து ஒப்பாரிவைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா மாவட்ட விவசாயநிலங்கள் தற்போது ஒருபோகத்திற்கே தண்ணீர் இன்றி வறண்டுக் கிடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக காவிரி நீர் முறையாக வந்து சேராததாலும், பருவகாலத்தில் மழைநீரை ஒருசேர நீராதாரத்தை பெருக்க வழியற்றுப்போனதாலும் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போனது. கடும் வறட்சியினால் கடைமடை பகுதியான நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டாவது காவிரி நீர் கிடைக்கும் என்கிற எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் மேட்டூர் அணை எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் திறக்கப்படவில்லை. கர்நாடகாவிடம் பெரவேண்டிய தண்ணீரையும் பெறமுடியாத நிலையில் அதிமுக அரசு உட்கட்சி பூசலில் உழண்டுக்கொண்டிருக்கிறது. இதனால் 2.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் நாகை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தண்ணீர் திறக்காமல் அலட்சியம் காட்டிய தமிழக அரசை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து வரும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை, மடப்புரம், ஆகிய கிராம மக்கள் உடைந்த கதவணைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் "கர்நாடக அரசிடம் தமிழக அரசு உடனே பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை விரைந்து பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும்," என்றனர். மேலும் அங்கிருந்த விவசாயிகள் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதோடு, துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும், நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த விவசாயி ஒருவர் கூறுகையில், " எங்களுக்கு வாழ்வாதாரமான காவிரி நீரை வழங்காமல் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கபடுகிறது. ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பஞ்சம் பிழைக்க விவசாய பணிகளை விட்டு ஹோட்டல் வேலைக்கும், சித்தால் வேலைக்கும் போகும் நிலையாகிவிட்டது. எங்களின் நிலமையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றனர்.