
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. இதனையடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
அதே சமயம் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கடந்த இரு தினங்களாக இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்த நிலையில் நேற்று(17.4.2025) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அந்த உத்தரவில், வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். அதே சமயம், 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் முடித்து வைத்ததாகக் கருதப்படும். விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு எந்த 5 மனுக்கள் என்பதை தேர்வு செய்து கூறுவோம்” என்று கூறி வழக்கை மே 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதனிடையே வக்ஃப் வாரிய புதிய சட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் நேற்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமயில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கல் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வஃக்புக்கு யாரும் கொடை கொடுக்கலாம். அது மதத்திற்கு கொடுப்பதல்ல இறைவனுக்கு கொடுப்பது. அப்படி கொடை கொடுப்பவர் 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்கிற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மோடி அவர்களே, நாங்கள் கேட்கிறோம்? பாஜகவிற்கு நன்கொடை கொடுக்கிற ஒருவர் பாஜகவின் உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் நன்கொடை பெற முடியும் என்று உங்கள் கட்சி சட்டத்தை திருத்த நீங்கள் தயாரா? ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.