உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸின் முக்கியமான, மூன்றாம் கட்ட ஆரம்ப நிலையிலிருக்கிறது இந்தியா. இந்நேரம் ஊரடங்கு மற்றும் சமூக விலகலைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பதோடு வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
தமிழகத்தை பல மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செகரட்டரி லெவலில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உடன் கூடுதல் டி.ஜி.பி.க்களும் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியான, கைத்தறித்துறையின் இயக்குனர் கருணாகரன் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நெல்லை வந்த உடனேயே மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
கலெக்டர் ஷில்பா, டி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம், மாநகர போலீஸ் கமிசனர் தீபக் டாமோர், துணை கமிசனர் சரவணன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபி நபு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரன் எஸ்.பி. ஒம் பிரகாஷ் மீனா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியவைகளை முழுமையாகக் கேட்டறிந்த கருணாகரன் தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக்குப் பின்பு, "கோவிட் -19 வைரஸ் பரவலில் இருந்து மக்கள் மீள்வதற்கு தமிழக அரசு சிறப்பு அலுவலர்களை மண்டல வாரியாக நியமித்துள்ளதால் ஆதற்கான பணியைத் தொடங்கியுள்ளோம். மாவட்டத்தில் நடந்த தடுப்பு முறைகள், பணிகள் சிறப்பாக உள்ளன, மேலும், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் ஒருங்கிணைப்பும் உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமான ஒருவர் வீடு திரும்பியுள்ள நிலையில், 55 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பிலிருப்பவர்களை மருத்துவக் குழு வீடு வீடாகச் சென்று கண்காணிக்கிறது. மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உதவும் வகையில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதோடு, கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்றார் கருணாகரன்.
அது சமயம் இந்திய மருத்துவ சங்கத்தின் நெல்லை கிளையின் தலைவர் டாக்டர் அன்புராஜன், "அரசால் தேர்வு செய்யப்பட்ட மூன்று தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சைக்கு ஏற்றவாறு படுக்கைகளை ஐ.சி.யு. வகையில் தயார் நிலையில் வைத்துள்ளன. அவைகளுக்கென்று பிரத்யேகமான வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை, பாளையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து முதற்கட்டமாக 31 டாக்டர்களும், 40 துணை மருத்துவப்பணியாளர்களும் கரோனா சிகிச்சையளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு நாளை, பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு டாக்டர்களுடன், தனியார் மருத்துவமனை டாக்டர்களும் இணைய உள்ளார்கள்" என்று நெல்லை மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரனிடம் தெரிவித்தார்.