தமிழகத்தில் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகள் தங்களுடைய விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவரும் வகையில், புதிய புதிய வாசகங்களுடன் ஃபிளக்ஸ் பேனர், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் எனப் பல இடங்களில் பொதுமக்கள் பார்வைபடும் படியாக வைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஆனால், தோ்தல் ஆணையத்தின் மிக முக்கியமான சட்ட விதிமுறைகளில் ஒன்று, தோ்தல் சமயங்களில் எந்தக் கட்சி சார்ந்த உறுப்பினர்களும், இதுபோன்ற விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்பதுதான். ஆனால், கரூா் மாவட்டத்தில் இந்தச் சுவர் விளம்பரங்களால் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படும் நிலை உள்ளது. ஆங்காங்கே, சுவா் விளம்பரங்களை அழிக்கும் சம்பவமும் நடந்துள்ளது. கரூா் மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் நான்குவழிச் சாலையில், எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அழிக்க வேண்டும் என்றும் அப்படி அழிக்காவிட்டால் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை, தரக் குறைவாக எல்லாச் சுவர்களிலும் எழுதுவேன் என்றும் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரித்திருந்தார்.
ஆனால், அதே சாலையில், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வினா் எழுதியிருக்கும் சுவர் விளம்பரங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்வதாக, பாஜகவினரை எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், "இந்தப் பிரச்சனையில், கரூா் மாவட்ட ஆட்சியா், தோ்தல் ஆணையத்தின் விதிமுறையைப் பின்பற்றி, எல்லாச் சுவர் விளம்பரங்களையும் அழிக்காமல், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கதக்கது" என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியா் மௌனம் காப்பது, கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.