நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் அமமுகவின் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதிமுக சார்பில் தேனியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், ''ஒன்றிய செயலாளர்கள், கட்சிக்கு உழைப்பவர்கள், கட்சிக்காக பாடுபடுபவர்கள், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு சீட்டு கொடுப்பதில் என்ன தவறு. ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு சீட் கொடுத்து என்ன பயன்? அவர்களைப் போய் பார்க்க முடியுமா? நாட்டு மக்களுக்காக போராடி திட்டங்களை வாங்கித் தருவார்களா? இல்லையே. அவர்களுடைய சொந்த லாபத்திற்காக அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்திற்கு வந்து பயனடைவதற்காக போட்டியிடுகிறார்கள். நம்முடைய அதிமுக வேட்பாளர் அப்படி அல்ல அவர் மக்களுக்காக உழைப்பதற்காக போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் பலர் பலவிதமாக பேசுகிறார்கள். ஒருத்தர் பேசுகிறார்'' என டி.டி.வி.தினகரன் பேசும் பழைய வீடியோ காட்சி ஒன்றை எல்.இ.டி திரையில் ஓட விட்டார். அதில் பேசிய டி.டி.வி.தினகரன், 'பிஜேபி நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற கட்சி. அவர்கள் டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கலாம். பெரிய கட்சியாக இருக்கலாம். இங்கு நோட்டாவோடு போட்டிப் போடுகின்ற கட்சி. அதுதான் உண்மை' என்ற காட்சி ஓடி முடிந்தது.
மீண்டும் பேச ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி, ''பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து நிறம் மாறும். ஆனால் இவரெல்லாம் அடிக்கடி நிறம் மாறுகின்றவர்கள். இவர்களை நம்பி நீங்கள் ஓட்டுப் போட முடியுமா? இத்தனை நாளா ஏன் இந்த மக்களை வந்து பார்க்கவில்லை. இந்த மக்களின் கஷ்டம், துன்பம், துயரம் பற்றி ஏதாவது கேட்டீங்களா? இவருக்கு ஓட்டுப் போட்டு என்ன பிரயோஜனம். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதும் மீண்டும் லேப்டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்''என்றார்.