Skip to main content

முன்விரோதத்தில் வாலிபர் கொலை; தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

erode veerappanchatram tasmac bar nearest incident  

 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 29). இவர் கடந்த 30 ஆம் தேதி ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதி காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு, அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜின்னா (வயது 30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது, ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதில் ஆத்திரம் அடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து சந்தோஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின், ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 டூவீலரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், முருகன், தெய்வராணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தோஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சின்னசேமூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் சித்திக் (வயது 34), பவானியைச் சேர்ந்த மனோஜ் குமார்(வயது 37), கனி ராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(வயது 30) ஆகிய மூன்று பேரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதால் ஜின்னா, மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அனுமதி கிடைத்ததும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு இந்த கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்