Skip to main content

“ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” - அஜித் குமார்

Published on 10/01/2025 | Edited on 10/01/2025
ajith interview latest

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. 

சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்கிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. முதலாவதாக துபாயில் நடைபெறும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்கிறார். இதற்காக அண்மையில் பயிற்சி எடுத்த போது அவரது கார் விபத்துக்குள்ளனது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் ரேஸில் பங்கேற்ற அஜித் அங்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, “நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை நடிக்க மாட்டேன். 2010ஆம் ஆண்டு முதல் என்னால் கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை. 18 வயதில் கார் ரேஸ் தொடங்கினேன். சினிமாவுக்கு வந்ததால் பங்கேற்க முடியவில்லை” என்றார். கார் ரேஸ் செப்டம்பர் வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்