Skip to main content

“மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” - அன்புமணி

Published on 10/01/2025 | Edited on 10/01/2025
Anbumani wants an investigation into the corruption in the Electricity Board

ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்; மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம் லாபம் ஈட்டும் நிலையை எட்டாதது ஏன்? என்ற வினா தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் எதிரொலிக்கிறது.

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் வருவாய் சுமார் ரூ.54,000 கோடியாக இருந்தது. அப்போது மின்சார வாரியத்தின் இழப்பு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இருந்தது. 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30%  விழுக்காடுக்கு மேலாக உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி பார்த்தால் 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் ரூ.15,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டில் மின்சார வாரியம் சுமார் ரூ.10,000 கோடி இழப்பை எதிர்கொண்டது.

2023-24 ஆம் ஆண்டில் வணிக இணைப்புகளுக்கு மட்டும் 2.18% விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக அந்த ஆண்டில் மின்சார வாரியத்தின் வருவாய் ரூ.98,863 கோடியாக அதிகரித்திருந்தது. இது 2021-22 ஆம் ஆண்டின் வருவாயைவிட சுமார் ரூ.40,000 கோடி அதிகமாகும். அதனால் அந்த ஆண்டிலாவது மின்சார வாரியம் இழப்புகளை தவிர்த்து லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்து இருக்கிறதே தவிர,  லாபம் ஈட்ட முடியவில்லை.

ஆண்டுக்காண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்படும் போதிலும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருவதற்கு காரணம், அதில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாக சீர்கேடுகளும் தான் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலான அளவு தனியாரிடமிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. இதற்காக தரப்படும் விலை தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக மின் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு ஆகும். தமிழக ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கான காரணம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு சுமத்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்