எந்திரன் படத்திற்குப் பிறகு இதுவரை பெரிதாக ஒரு பிரம்மாண்ட வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இயக்குநர் ஷங்கர் தற்பொழுது கேம் சேஞ்ஜர். படம் மூலம் விட்ட இடத்தை பிடிக்க களத்தில் குதித்து இருக்கிறார். இந்த முறை தமிழில் இல்லாமல் தெலுங்கு தேசத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷங்கர் ஒரு பான் இந்தியா படமாக அதை உருவாக்கி அதன் மூலம் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா?
ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக புரமோஷன் வாங்கிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் வந்து இறங்குகிறார் ராம் சரண். வந்த இடத்தில் ஊழல் செய்யும் அமைச்சர்களின் ஊழல்களை தடுக்க ஆரம்பிக்கிறார். முதல்வர் ஸ்ரீ காந்த்தின் அரசியல் வாரிசான அமைச்சர் எஸ்.ஜே.சூர்யா செய்யும் சட்டவிரோத செயல்களை அட்டவணை போட்டு தடுக்கிறார். இதனால் அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், ஐ.ஏ.எஸ். கலெக்டர் ராம் சரனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்? ஆந்திராவுக்கு நல்லாட்சி அமைந்ததா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஊழல் செய்யும் அரசியல்வாதி அதை எதிர்க்கும் அரசாங்க அதிகாரி என்ற அரதப்பழசான ஒற்றை வரி கதையை, தன்னுடைய பாணியில் மிகவும் பிரம்மாண்டமாகவும் கமர்சியல் நிறைந்த படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்தின் முதல் பாதி வழக்கமான ஷங்கர் படம் போல் அதிகமான கிரிஞ்ச் காட்சிகள் நிறைந்த திரைக்கதையாக விரிகிறது. போகப் போக இடைவேளைக்கு முன்பு ஒரு ரசிக்க வைக்கும் படியான திருப்பத்துடன் முடிந்து பின்பு இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பயணித்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல பிரம்மாண்ட கமர்சியல் படம் பார்த்த உணர்வை இந்த கேம் சேஞ்ஜர். கொடுத்திருக்கிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து ஹீரோவுக்கும் வில்லனுக்குமான கேட் அன் மௌஸ் கேமாக விரிகிறது இந்த கேம் சேஞ்ஜர்.
இயக்குநர் ஷங்கர் தனது முந்தைய படங்களில் என்னவெல்லாம் செய்தாரோ அந்தந்த படங்களில் இருந்து பல்வேறு ரெஃபரன்ஸ்களை எடுத்துக் கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல்வேறு படங்களின் காட்சி அமைப்புகளையும் எடுத்துக் கொண்டு அவையெல்லாம் கலந்து கட்டி ஒரு பார்சலாக இந்த கேம் சேஞ்ஜர் படத்தைக் கொடுத்து கம்பேக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா என்றால்? ஓரளவு ஆம் என்றே சொல்லலாம்..! முதல் பாதி பிரம்மாண்டத்தையும், மேக்கிங்கையும் தாண்டி கதையும் கதாபாத்திரங்களும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே கிரிஞ்சான காட்சிகளாக நகர்வதால் பல்வேறு இடங்களில் அயற்சி ஏற்பட்டாலும் இன்டர்வலில் இருந்து ஆரம்பிக்கும் இரண்டாம் பாதி அதையெல்லாம் சரி கட்டி வேகமாக விறுவிறுப்பாகவும் நகர்ந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது.
நாயகன் ராம் சரண் தனக்கு என்ன வருமோ அதையே இப்படத்தில் மிகவும் சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார். பான் இந்தியா ரசிகர்களை காட்டிலும் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் அதற்கு ஏற்றவாறு ராம் சரண் அதகளப்படுத்தி இருக்கிறார். அதுவே படத்திற்கு சற்று சாதகமாகவும் அதே சமயம் பாதகமாகவும் அமைந்திருக்கிறது. அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் வெவ்வேறு பரிணாமத்தில் சிறப்பாக நடித்து ராம் சரண் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல் சத்தமாக கத்தி கூவி ஆர்ப்பாட்டம் செய்து கண்களை உருட்டி முகபாவனைகளை வெறித்தனமாக காண்பித்து தன் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை தீனி போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதையும் இப்படத்தில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக வரும் கியாரா அத்வானி வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். வழக்கம்போல் அவர் இருக்கிறாரே என்பதற்காக அவருக்காக பிரம்மாண்ட பாடல்கள் காதல் காட்சிகளை கொடுத்து சரி கட்டி இருக்கிறார்கள். முதல்வராக வரும் ஸ்ரீகாந்த் மற்றும் அவர் நண்பராக வரும் சமுத்திரக்கனி இருவரும் தங்களது பாத்திரம் அறிந்து நல்ல நடிப்பை கொடுத்து படத்திற்கு ஒளி சேர்த்து இருக்கின்றனர். சைடு காமெடியனாக வரும் சுனில் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு காட்சியே வந்தாலும் பிரம்மானந்தம் கலகலப்பு ஊட்டி சென்று இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா-வின் அண்ணனாக வரும் ஜெயராம் ஆங்காங்கே சிரிப்பு மூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியாகவும் அம்மாவாகவும் வரும் அஞ்சலி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் தெலுங்கில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானவர்கள் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
தமன் இசையில் பாடல்களும் பின்னணியில் வரும் இசையும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒரு ஷங்கர் படத்தின் பாடல்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அந்த அளவு முக்கியத்துவமான பாடல்களையும் இசையையும் வாரி வழங்கி இருக்கிறார் தமன். ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளிலும் ஆக்சன் காட்சிகளிலும் தெறிக்க விட்டிருக்கிறார்.
இயக்குநர் சங்கர் இத்தனை வருட காலம் எந்த மாதிரியான கதை களத்தைக் கொண்டு அதில் வெற்றி பெற்று பெரிய இயக்குநராக வளம் வந்தாரோ அதே ஃபார்முலாவை வைத்துக் கொண்டு தெலுங்கிலும் தற்போது கேம் சேஞ்ஜர் மூலம் களமிறங்கி இருக்கிறார். நாம் பல்வேறு வருடங்களாக பார்த்து பழகிய அதே ஊழல், மோசமான அரசியல்வாதி, நேர்மையான அதிகாரி போன்ற பழைய விஷயங்களை வைத்து இந்த படத்தையும் கொடுத்திருக்கும் ஷங்கர் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் படியான மசாலா படமாக கொடுத்து அதே சமயம் மற்ற மொழி ரசிகர்களையும் ஓரளவு திருப்திப்படுத்தி இருக்கிறார். இது இந்த படத்துக்கு பாசிட்டிவ் வைபை கூட்டி இருக்கிறது.
கேம் சேஞ்ஜர் - புது மாதிரியான பழைய கேம்!