நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது.
ஒரு அரசியல் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் 'விவசாயி சின்னம்' பறிக்கப்பட்டு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதற்கான உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்களை வழங்க இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உழவு செய்யும் விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் கரும்பு விவசாயி சின்னம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.