திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே வனப்பகுதியையொட்டியுள்ள தீர்த்தம் என்ற என்ற பகுதியில் உள்ள சாலையில் இன்று காலை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் சென்று வந்தனர். அப்போது ஒற்றைக் கொம்பன் என்றழைக்கப்படும் ஒற்றை தந்தம் கொண்ட யானை அந்த சாலை நடுவே கம்பீரமாக நடந்து வந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை திருப்பி கொண்டு வந்த வழியில் சென்றனர்.
அந்த யானையை சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். அந்த சாலை ஆலங்காயம் பகுதியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலை என்பதால் அவ்வழியாக நாள் ஒன்றுக்கு பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். எனவே அந்த யானை எங்கு முகாமிட்டுள்ளது என்று வனத்துறையினர் கண்டறிந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டி பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த யானை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆம்பூர், கீழ் முருங்கை பனங்காட்டேரி ஆகிய பகுதிகளில் 4 நாட்கள் முகாமிட்டு பொதுக்களை அச்சுறுத்தியது. இந்த யானை தற்போது மீண்டும் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனப்பகுதியை யொட்டியுள்ள தீர்த்தம் சாலையில் கம்பீரமாக சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.