Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரத்திற்கு தயாராகும் இடம்! (படங்கள்) 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரத்திற்கு ஒரு ஏக்கர் அளவில் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையொட்டி இன்று (30.11.2021) கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டுக்குப் பின்புறம் கீரை, கொத்தமல்லி வியாபாரம் செய்யும் இடத்தை சுத்தம்செய்து இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ. அதிகாரி டி.ஆர்.ஒ. சாந்தி நேரில் ஆய்வு செய்தார். 

 

அப்போது மீன்பாடி வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து கூச்சலிட்டனர். அவர்களிடம் பேசியபோது, "கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் எங்களுக்கு முன்கூட்டியே இடத்தைக் காலி செய்ய அவகாசம் தராமல் திடுதிப்பென்று அதிகாரிகள் வந்து எங்கள் வண்டிகளை அப்புறப்படுத்தச் சொன்னால் நாங்கள் எங்கு போவது? இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்த்துவிட்டு பகலில்தான்  தூங்குவோம். பாதிபேர் தூங்கப் போய்விட்டனர். இப்போது அனைத்து வண்டிகளையும் எப்படி உடனே அப்புறப்படுத்த முடியும்" என்று புலம்பினர். இதைக் கேட்ட டி.ஆர்.ஒ., வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Next Story

“ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது” - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிட்ப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.