காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (07.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ஈரோடு மேயர் மற்றும் துணை மேயர் அறைகளை சீலிடப்பட்டன. அதோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.