![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/bYcn8bkZiGkcji_jfUzJaHltlCaGA1qVl3zRWxiK6l4/1594652379/sites/default/files/inline-images/_101300169_6b05bb8e-c6e0-4640-9af3-86dfdbfb1817_0.jpg)
இந்தியாவில் வாழும் மக்களில் முப்பது சதவீதம் பேர் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். இரவில் உணவில்லாமல் தூங்கும் பரிதாபகரமான நிலையில் உள்ள லட்சக்கணக்கான மக்களும் இங்கு உண்டு. அன்றாடம் உழைத்து அதன் மூலம் பசியை போக்கும் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பிச்சை எடுத்து பசியாறும் மக்கள் என இப்போதும் இந்திய தேசம் வறுமையுடன் பின்னி பிணைந்திருக்கிறது. ஆனால் இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது என்று மத்திய பா.ஜ.க. அரசு எத்தனையோ வெற்று விளம்பரங்களை வெளியிடுகிறது அதே போல் அதன் செயல்பாடும் உள்ளது. அதில் ஒன்று தான் கருப்பு பணம் ஒழிக்கப்படுகிறது என்று கூறிவிட்டு ஒரு நாள் இரவில் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பட்ட துன்ப துயரம் அது ஒரு நீண்ட பதிவு. அப்படியொரு நடவடிக்கையை அறியாத மனிதர்கள் இப்போதும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த செய்தி.
![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/N0CkqJOu4XwSbo_hUKxBI897UWHnWHmkq8HBD056ULM/1594652506/sites/default/files/inline-images/xccxcxzczc.jpg)
ஈரோடு மாவட்டம், அந்தியூரைடுத்த பொதிய முப்பனூர் பகுதியை சேர்ந்த வயதானவர் சோமு இவர் பார்வையற்றவர். இவரது மனைவி பழனியம்மாள், இவருக்கும் காலில் குறைபாடு உள்ளது. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் இந்த தம்பதியினர் நீண்ட காலமாக சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை சென்ற சில வருடங்களுக்கு முன்பு இவரது வயதான தாயிடம் கொடுத்து வைத்திருந்தார். இப்போது கரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் செலவுக்கு திணறிய சோமு தன் தாயிடம் செலவுக்காக தான் சேர்த்து வைத்திருந்த அந்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.
அவரது தாய் ஏற்கனவே அந்த பணத்தை வீட்டில் இருந்த ஒரு பானையில் துணியில் கட்டி வைத்திருந்தார். மகன் பணம் கேட்டதால் அந்த பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை வாங்கிய சோமு அதை தனது செலவுகளுக்காக கடையில் கொடுத்து மாற்ற சென்றபோதுதான், அந்த பணம் பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட செல்லாத நோட்டுகள் என்ற அதிர்ச்சியான தகவல் அவருக்கு தெரியவந்தது. அதாவது அதில் இருந்தது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். இது செல்லாது என்ற விஷயம் அவருக்கு இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. அதில் 24 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இவை அனைத்தும் செல்லாது என்று கேள்விப்பட்டு அந்தப் பெரியவர் மன வேதனை அடைந்தார்.
![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/w1TU2cKU1bvoSoJIJP25zpBTtYrpC3qFAUehpCcvyGw/1594652590/sites/default/files/inline-images/20200713_180654.jpg)
அந்த பகுதி செய்தியாளர் ஒருவர் மூலம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த பரிதாப நிலை தெரிவிக்கப்பட்டது. பிறகு சோமு, தனது மனைவியுடன் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் கதிரவனை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். இதை தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உடனடியாக நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்தார். அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம் 24 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையாக அந்த தம்பதியிடம் கொடுத்தார். இதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த தம்பதிகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர், இது நெகிழ்ச்சியாக இருந்தது. பரிதாபம் மோடி தவிக்க விட்டார், கலெக்டர் அவர்களின் சேமிப்பை திரும்ப கொடுத்தார்.