Skip to main content

கர்நாடகாவில் ஆட்சிக்கவிழ காரணம் ஸ்டாலின் இராசி- எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் கே.வி குப்பத்தில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

கிராமத்தில் பசுமை புரட்சி இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு கறவை மாடுகளை கொடுத்த அரசு எங்களுடைய அரசுதான். அதேபோல் ஆடு வளர்ப்பு திட்டம். இன்று ஏழை எளிய தொழிலாளர்கள, விவசாய பெண் தொழிலாளர்கள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் நான் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் உங்கள் முன் விவசாயியாக இருந்து பேசுவது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

edappadi palanisamy election campaign


இன்றைக்கு ஸ்டாலின் என்னென்ன பொய்யெல்லாம் பேசுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்யணும். எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?. இது என்ன பொதுத்தேர்தலா? இது பொதுத் தேர்தலாக இருந்தால் சொல்லலாம். 2021ல் ஒரு பொதுத் தேர்தல் வருகிறது, சட்டமன்ற பொதுத் தேர்தல் அந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் நீங்கள் சொன்னால் அது பரவாயில்லை. 234 தொகுதிகள் நீங்கள் மெஜாரிட்டி வந்து ஆட்சி அமைத்தால் நீங்கள் சொன்ன திட்டத்தை நீங்கள் நிறைவேற்றலாம். இது சட்டமன்ற இடைத்தேர்தல் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நீங்கள் எப்படி முழுவதும் வெற்றி பெற முடியும். இப்படி ஒரு பொய்யான வாக்குறுதிகளை இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, சொல்ல முடியாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அந்த பொய்யிலே பெற்ற வெற்றிதான் அந்த இடைத் தேர்தல் வெற்றி.

நேற்று கூட சொன்னார் 13 பெரியதா 9 பெரியதா என்று. ஒன்பதுதான் பெருசு ஏனென்றால் நீதி, நேர்மை, தர்மம் வென்றது. நாங்கள் உண்மையை சொல்லி ஓட்டு கேட்டோம். ஆனால் நீங்கள் அப்படி அல்ல பொய் சொல்லி ஓட்டுகளை ஏமாற்றி பெற்ற வெற்றி. நீங்கள் உண்மையை சொல்லி இருந்தால் ஒரு இடம் கூட வென்றிருக்க முடியாது. விவசாய கடன் தள்ளுபடி, ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய், 12 மாதத்திற்கு 72 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பீர்கள், பணம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த நாட்டினுடைய முழு பட்ஜெட்டையும் கொடுத்தால் கூட பத்தாது. அத்தனையும் பொய். இதை அடிக்கடி எல்லாக் கூட்டத்திலேயும் பேசி பேசி மக்களுடைய மனதில் பதிய வைத்து மாதம் 6000, 6000 என்று சொன்னதும் பரவாயில்லை 6 ஆயிரம் பணம் கிடைக்குது. 12 மாதத்திற்கு 72 ஆயிரம் ஆச்சு பரவாயில்லை ஒருமுறை ஓட்டு போட்டு பார்க்கலாம் அப்படி என்று அவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டார்கள் அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

திமுகவுடன் கூட்டணி வைத்ததால் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி. நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவை மாண்பை குறைத்தவர்கள் திமுகவினர். கர்நாடகாவில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சித்து பார்த்தது ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. போகின்ற இடத்திலெல்லாம் நேற்று முழுவதும் என்னை பற்றி, எங்களுடைய கட்சியைப் பற்றி, எங்களுடைய ஆட்சியைப் பற்றி, எங்களை தனிப்பட்ட முறையில் பேசுகிறார். வேறு ஏதும் சொல்வதற்கு அவர்களுக்கு வழி இல்லை. எதைச் சொல்லி ஓட்டுக் கேட்கப் போகிறீர்கள். நாங்கள் சொல்கிறோம் இதை இதை செய்தோம் என உங்கள் முன்னே சொல்லிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் எதைச் சொல்லி ஓட்டு கேட்கபோகுறீர்கள் என்றார்.

முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி ,வீதியில் சட்டையை கிழித்துக் கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள் என மறைமுகமாகவும் ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்