Skip to main content

'நான்கு பேரின் பெயரைக் கூற இ.டி வற்புறுத்துகிறது' - நீதிபதியிடம் புகார் தெரிவித்த ஜாபர் சாதிக்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'ED insists to name four people' - Jafar Sadiq complained to the judge

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியது.

அதே சமயம் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் மார்ச் 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் திங்கட்கிழமைகள் அன்று போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் செல்போன் எண்ணை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்து எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை விசாரிக்க 15 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில் அதற்கான அனுமதியை கொடுத்து, ஜூலை 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜாபர் சாதிக்கை சிறையில் அடைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் நீதிமன்றத்தில், 'சமூகத்தில் முக்கியமாக உள்ள நான்கு நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சி செய்து வருவதாகவும், அவர்கள் பெயரைக் கூற வேண்டும் என அமலாக்கத்துறை தன்னை வற்புறுத்துவதாகவும் ஜாபர் சாதிக் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்