அடுத்து என்றைக்கு ஆளுநர் ஆய்வுக்குப் போகப்போகிறார் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். ஆளுநர் எங்கு ஆய்வுக்கு சென்றாலும் அங்கு சென்று நானே கறுப்புக்கொடி காட்டுவேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக மாணவரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமை வகித்தார். இணை செயலாளர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், கரூர் மாவட்ட செயலாளர் நன்னீயூர் ராஜேந்திரன், அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்குமண்டலத்தில் தி.மு.க.விற்கு சரியான ஓட்டு கிடைக்கவில்லை. 10 இடங்கள் முதல் 15 இடங்களில் தோல்வியை தழுவியுள்ளோம். எனவே தான் ஆய்வு முடிந்தவுடன் அங்கிருந்தே களையெடுப்பை துவங்கினேன். திமுக தலைவர் கலைஞர் பணியாற்ற முடியாமல் ஓய்வில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவருக்குச் சிறிதும் கெட்டப்பெயர் வந்துவிடக்கூடாது. அவருடைய பெயருக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் நாம் நம்முடைய பணியை ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆட்சி என்பது சாதாரணம். அனைவரும் எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, மேயர்களாக நகராட்சித் தலைவர்களாக வரலாம். ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரே முதல்வர், அமைச்சர்களாக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் அமைச்சர்களாக வரலாம். அது வேறு. ஆனால், இந்த இயக்கத்தை மறந்துவிடக் கூடாது. திராவிட இயக்கமாக இந்த இயக்கத்தைத் தலைவர்கள் தோற்றுவித்திருந்தாலும் அது திராவிடர் கழகமாக, அதன்பிறகு திராவிட முன்னேற்றக் கழகமாகக் கம்பீரமாக வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழினத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி திமுக. அந்த வகையில்தான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். ஆய்வுக் கூட்டம் என்பது ஒப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ நடத்தக்கூடியது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எவ்வளவோ கட்சிகள் இருக்கலாம். புதிது புதிதாக கட்சிகள் வரலாம். கட்சி தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடிய தலைவர்களை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது அவர்களுடைய ஆசை. அதில் நான் குறுக்கீடு செய்யவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. ஏனெனில் அவர்களை விமர்சித்து நமக்கிருக்கக் கூடிய தகுதியை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய ஸ்டாலின், யாரையும் விமர்சித்தோ, கேலி செய்தோ, கிண்டல் செய்தோ, நான் பேசியதில்லை. ஏனெனில் நான் கலைஞரின் மகன். அவரால் உருவாக்கப்பட்டவன். எந்த ஆட்சியையும் கலைஞர் கலைத்தவர் அல்ல, கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்தார் என்று யாராவது ஆதாரத்தோடு நிரூபித்து விட்டால் நாளைக்கே இந்த ஆட்சியை நான் கவிழ்க்கிறேன். அவருடைய ஆட்சியைத் தான் இரண்டு முறை கவிழ்த்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாம் கருப்பு கொடி காட்டினால் 7 ஆண்டுகள் சிறை என்று பயமுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல. ஏழு வருடம் என்ன மாநில சுயாட்சி பறி போகிறது என்றால் அதற்காக நாங்கள் ஆயுள் முழுவதும் இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். அதைவிடப் பெருமை வேறு என்ன வந்துவிடப் போகிறது? குறிப்பாக, என்றைக்கு ஆளுநர் ஆய்வுக்குப் போகப்போகிறார் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். நானே போகப்போகிறேன். கறுப்புக் கொடி காட்டுவதற்கு! கைது செய்யுங்கள்; தயார்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.