
கி.ஆ.பெ. மருத்துவகல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பயிற்சிக்காக திருச்சி அரசு மருத்துவனையில் பயிற்சி மருத்துவ மாணவர்களாக சுமார் 150 பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு வருடம் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பார்கள். கிட்டதட்ட இவர்களால்தான் அரசு மருத்துவமனை இயங்குகிறது.
பயிற்சி மருத்துவர்கள் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் 36 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஓய்வு நேரம் என்பது அரை மணி நேரம் தான் இருக்கும். எனவே இவர்களுக்கு உதவியாக மருத்துவமனையில் உள்ள சீனியர் செவிலியர்கள் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவியாக மருந்து மாத்திரைகள் கொடுப்பது இவர்களின் வேலை. ஆனால் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அங்கு பணியில் உள்ள பயிற்சி டாக்டர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இதுவரை நேரடியாக புகாராக கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. காரணம் இந்த சீனியர் நர்ஸ் பலபேர் இங்கு உள்ள சீனியர் மருத்துவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் இவர்களை பகைத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதால் இவர்கள் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் சிலரை சாதாரண வார்டுக்கு மாற்றுமாறு அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை, பயிற்சி டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த நர்சு, பயிற்சி டாக்டரை வாடா...போடா என மரியாதை இல்லாமல் பேசியும் “உன் வயதுதான் என் பணிஅனுபவம். என்னையே வேலை செய்ய சொல்றீயா” என மிரட்டியிருக்கிறார். மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் பயிற்சி மருத்துவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த பேச்சு அவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நர்சு மன்னிப்பு கேட்கும்வரை பணி செய்வதில்லை என அரசு பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவ மாணவர்களாகிய எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி வருகிறார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற போதுகூட கிளவுஸ், ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகளை எடுத்து தந்து உதவியாக இருக்க வேண்டியவர்கள் செய்யாமல். நீயே எடுத்து கொள். நீ சொல்வதை கேட்க வேண்டுமா? என்று கேவலமாக பேசுகிறார்கள். இரவு பணியின்போது செவிலியர் ஒருவர் வாடா..போடா.. என பேசி அவமரியாதையாக பேசிவிட்டார். எனவே, அவர் மன்னிப்பு கேட்கும்வரை தர்ணா போராட்டத்தை கைவிட போவதில்லை என்றனர்.
பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு விசயத்தை கேள்விப்பட்ட அரசு மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவகல்லூரியின் முதல்வருமான அனிதா இரவு11 மணிக்கு மருத்துவனைக்கு வந்து பயிற்சி மருத்துவர்களிடம் பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கடுமையாக பேசி பயிற்சி மருத்துவர்களை அழைத்து சென்றார்.
மருத்துவமனை டீன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தை கலைத்தாலும் அவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள இந்த காயத்திற்கு சரியான மருந்து போடாமல் அப்படியே விட்டு விட்டால் அரசு மருத்துவனையின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை.