
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு ஊராட்சி 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தியாகுவை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் விளாம்பட்டி, எத்திலோடு பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது ''தமிழக முதல்வருக்குத் தமிழகம் முழுவதும் பேராதரவு பெருகி வருகிறது. பெண்களிடத்தில் அதிகமான ஆதரவு அலை வீசி வருகிறது. தமிழக முதல்வரை வீட்டின் ஒரு பிள்ளையாகக் கொண்டாடி வருகின்றனர். எனவே திமுகவிற்கு அளிக்கும் வாக்கு மட்டுமே செல்லும் வாக்கும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் அது செல்லாத வாக்கு ஆகிவிடும். எனவே நல்ல திட்டங்கள் தொடர்ந்திட திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சந்திரபாண்டியன் உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.