திண்டுக்கல் அருகே உள்ள பொன்னுமாத்துரை புதுப்பட்டியை சேர்ந்த எம்பத்திஐந்து வயதான மருதயம்மாளுக்கு செல்வி, முத்தம்மாள் என இரண்டு மகள்களும் வெள்ளச்சாமி என்ற மகனும் இருக்கிறார்கள். இந்த மருதயம்மாளுக்கு ஊருக்கு அருகே மூன்று ஏக்கர் நிலமும் இருந்தது. அதில் விவசாயம் செய்து கொண்டு இரண்டு மகள்களையும் மகனையும் கட்டி கொடுத்து பேரன் பேத்திகளோடு வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் மகன் வெள்ளச்சாமியும் பேரன் ஜெகநாதனும் மருதாயம்மாளிடம் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்க வலியுறுத்தி இருக்கிறார்கள். அதற்கு மருதாயம்மாள் ஒத்துழைக்க வில்லை. இதனால் டென்ஷன் அடைந்த மகன் தனது தாயார் மருதாயம்மாள் இறந்து விட்டது என திண்டுக்கல் மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழும் போலியாக வாங்கி தனது மகன் ஜெகனாதன் பெயரில் பத்திரம் எழுதி பதிவு செய்து அந்த நிலத்தையும் மற்றொருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெள்ளச்சாமி விற்று விட்டார். இந்த விஷயம் மருதாயம்மாளுக்கு தெரிந்ததின் பேரில் தான் கடந்த வாரம் எஸ்.பி . சக்திவேலுலிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு மருதாயம்மாளின் மகன் வெள்ளச்சாமி மற்றும் பேரன் ஜெகநாதனையும் திண்டுக்கல் தாலூகா போலீசார் கைது செய்தனர்.
இது சம்மந்தமாக மருதாயம்மாளை சந்திக்க பொன்னுமாத்துரை புதுப்பட்டிக்கு போன போது அங்கு இருந்த பேத்தியோ, "எங்க பாட்டி பக்கத்தில் உள்ள பெருமாள் தோட்டத்திற்கு களை எடுக்கும் வேலைக்கு போய் இருக்கிறது" என்று சொன்னதின் பேரில் நாமும் அந்த தோட்டத்திற்கு சென்ற போது கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மருதாயம்மாள் தோட்டத்தில் களை எடுத்த கொண்டு இருந்தவரிடம் கேட்டபோது..
"எனக்கு தெரியாமல் பத்திரம் எழுத போகிறார்கள் என்ற விஷயம் தெரியவே அதை தடுத்து விட்டேன் அதன் பிறகு தான் நான் செத்து போய்விட்டதாக போலியான சான்றிதழ் வாங்கி பதிந்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஊர்காரங்க சொல்லி தான் எனக்கு தெரிந்தது. அப்படி இருந்தும் கூட எனது இரண்டு மகள்களுக்கு தலா இருபதுஆயிரம் மட்டும் கொடுத்து விடு என கெஞ்சியும் கூட பணம் தரமுடியாது என கூறி என்னை வாயாக்கு வந்தபடி மகனும், பேரனும் பேசினார்கள். அதுனால தான் புகார் கொடுத்தேன். எட்டு லட்சத்துக்கு எனது சொத்தை விற்று மகனும் பேரனும் திங்கநினைச்சா சும்மாவிடுவனா. நானே என் பேத்தி வீட்டில் இருந்தாலும் இந்த வயதில் கூலி வேலைக்கு போய் அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பேத்தியிடம் கொடுத்து தான் கஞ்சி குடித்து வருகிறேன்" என்று கூறினார்.