ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இதற்காக அண்மையில் உயர்மட்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிடுமாறு திமுக, உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், 'ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, ஒன்றிய மாநில உறவை மட்டும் இன்றி ஒன்றியத்திற்கு பாதகமான விளைவுகளை இத்திட்டம் ஏற்படுத்தும். அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு, அதிகார பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் விசாரணையை நிறுத்த வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அதேநேரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டம் கூறும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உதவாது' என திமுக தெரிவித்துள்ளது.