தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர்.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகர புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஐபிஎஸ், இன்று (08.07.2024) பிற்பகலில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அப்போது சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் தனது பொறுப்புகளை புதிய காவல் ஆணையர் அருணிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் சென்னையின் 110வது காவல் ஆணையர் என்ற சிறப்பை அருண் பெற்றுள்ளார். தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆவார். அதோடு திருச்சி, மதுரையில் காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ள்ளார். இவர் ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி ஆகும். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கண்டுபிடிக்க போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி ஆகும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” எனத் தெரிவித்தார்.