
திண்டுக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட சரவணன் தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், நாகல் நகர் ரவுண்டானம், நத்தம் ரோடு, காட்டாஸ்பத்திரி ரவுண்டான, ஆர்.எம்.காலணி உள்பட பத்துக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று சாலை தடுப்புகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், ரவுண்டானாக்கள் மற்றும் திருச்சி ரோட்டில் உள்ள அண்டர் கிரவுண்ட் ஆகியவற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் மற்றும் கிடப்பில் போடப்பட்ட பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடியாக ஆய்வு செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரவணன், “திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் சாலை போக்குவரத்து, தெரு விளக்குகள், போக்குவரத்து சிக்னல் ஆகியவை செயல்படுகிறதா என்பது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக துறை அதிகாரிகளுடன் இன்று மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம். மொத்தமாக 12 இடங்களில் ஆய்வு செய்து இருந்தோம். அதன்படி தற்போது பேருந்து நிலையம் அருகே வேலைகள் தொடங்கியுள்ளது. மேலும் சாலை தடுப்புகள், நாகல் நகர் ரவுண்டானம், பூங்காக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து மரங்கள் நடுவது உள்ளிட்ட சிறிய பணிகளை தொடங்கியுள்ளோம்.
சரியாக இரண்டு மாதங்களில் திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் தெருவோரங்களில் இருக்கின்ற இடங்கள், போக்குவரத்து ரவுண்டான, சாலை தடுப்புகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை சரி செய்யப்படும்.” என்றார்.

மாநகராட்சி தரப்பில் காய்ந்த மரங்கள் அதிகமாக வெட்டப்படுகிறது. அதற்கு பதில் புதிய மரங்கள் நடப்படுமா? என்ற கேள்விக்கு, “மரக்கன்றுகள் நடுவதற்கு இது சரியான தருணம் இல்லை. மாவட்டம் முழுவதும் மிகப் பெரிய முன்னெடுப்பாக கிரீன் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 50 லட்சம் மரங்கள் நடப்பட உள்ளது. என்று வனத்துறையுடன் சேர்ந்து பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. செடிகள் 5 அடி வரை வளர்ந்ததும் மழைக் காலங்களுக்கு முன்பு நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 1 மரம் வெட்டப்படும் பொழுது 10 மரங்கள் வைக்கப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி பகுதியில் மேம்பாலங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “நெடுஞ்சாலைத் துறையுடன் திண்டுக்கல் மாநகராட்சியில் மேம்பாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படாமல் இருக்கும் பூங்காக்களை நடைப்பயிற்சி மையத்துடன் அமைத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குப்பைகள் பல இடங்களில் அகற்றப்பட்டு அங்கு பூங்காக்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே நிலையத்தில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கரூர் ரயில்வே சுரங்கப் பாதை ஐந்து வருடங்களாகியும் பயன் பாட்டில் இல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “கரூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மேலும் ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் பணிகள் நடைபெறுகிறது. குறிப்பாக அதற்கு முந்தைய பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்