மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எதிர்வரும் சந்ததியினர் கற்று, கண்டு அறிந்து கொள்ள வேண்டிய அரசு மூலிகைப் பண்ணை, விளையாட்டு மைதானமாக, பொட்டல் காடாக உருமாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசின் மூலிகைப் பண்ணை நிறுவப்பட்டுள்ளது. அங்குள்ள பெயர்ப்பலகை மட்டுமே மூலிகைப் பண்ணை என நமக்கு நினைவூட்டுகின்றது. எப்பொழுதும் தொங்கும் பூட்டு. உதவாத அடிகுழாய். காய்ந்து, பட்டுப் போன செடி கொடி மரங்கள் இவைகளை உள்ளடக்கியதுதான் இந்த மூலிகைப் பண்ணை. ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழையும் அதிகாரி, அமைச்சர் தொடங்கி மக்கள் எவரும் கண்டிப்பாக இதனைக் கடந்து செல்ல வேண்டும்.
எனினும் மாவட்ட நிர்வாகத்தின் பாராமுகத்தால் கோரமாக காட்சியளிக்கின்றது இந்த மூலிகைப்பண்ணை. நோய் மூலம் ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் இழக்காமல் இருக்க மூலிகை தாவரங்களை பற்றிய அறிவு அவசியம். மாவட்ட தலைநகரங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ள மூலிகை பூங்காக்களை, ஆர்வம் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகமே சிறந்த முறையில் பராமரித்து பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் கண்டு செல்லும் விதமாக காட்சிபடுத்திட வேண்டும். இதன் மூலம் மக்கள் அரோக்கியமாக வாழ வழி ஏற்படும் என்று அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர் சமுக ஆர்வலர்கள். செவி சாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?.